தொண்டாமுத்தூர் அருகே தொழிலாளி மர்மச்சாவு வழக்கில் 2 பேர் கைது

தொண்டாமுத்தூர் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-03 22:45 GMT

பேரூர்,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 28), பந்தல் அமைக்கும் தொழிலாளி. கடந்த 29–ந் தேதி பந்தல் போடும் இடத்தில் கீழே விழுந்து விட்டதாகவும், கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்களுக்கு தகவல் வந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள் மணிகண்டனின் நிலையை கண்டு அதிர்ச்சி அதிர்ச்சியடைந்தனர். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் எனக்கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் மணிகண்டன் சாவு குறித்து எங்களுக்கு சந்தேகமான நபர்களிடம் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மணிகண்டனின் அக்கா பிரியா (30) சென்னை ஜகோர்ட்டில் மணிகண்டனின் சாவில் மர்மம் உள்ளதால் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் மணிகண்டனை வேலைக்கு அழைத்து சென்ற வேலுச்சாமியின் மகன்கள் ராஜேஷ் (28) மற்றும் ராம்கி (26) ஆகியோரை தொண்டாமுத்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்