கோத்தகிரி அருகே வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு

கோத்தகிரி அருகே வடமாநில வாலிபரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-03 23:00 GMT

கோத்தகிரி,

அசாம் மாநிலத்தை சேர்ந்த நாகன் என்பவரின் மகன் மாணிக்(வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது. கட்டிட தொழிலாளியான மாணிக், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மாணிக் தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பரான பிரசன்னா ஆகியோருடன் மூணுரோடு சாலை வழியாக அரவேணு பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த 3 மர்ம ஆசாமிகள் திடீரென மாணிக்கை வழிமறித்தனர். பின்னர் சாலையோரத்தில் கிடந்த ஒரு செங்கலை எடுத்து அவரது முகத்தில் தாக்கினர். இதனால் நிலைகுலைந்துபோன மாணிக், காயமும் அடைந்தார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் பிரசன்னாவிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் மிரட்டி பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து காயம் அடைந்த மாணிக், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில வாலிபரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்