நெல்லை கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த யானை பரிதாப சாவு
உடல் நலம் பாதிக்கப்பட்டு நெல்லை கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த யானை பரிதாபமாக இறந்தது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்தவர் அசன் மைதீன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சுந்தரி என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். கடந்த 2 வருடங்களாக யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் 85 வயது ஆகிவிட்டதால் முதுமை காரணமாக கண் பார்வையை இழந்ததுடன், பற்களும் விழுந்து விட்டதால் சாப்பிட முடியாமல் யானை அவதிப்பட்டது.
இதையடுத்து அசன் மைதீன் கடந்த 23-ந்தேதி நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு யானையை அழைத்து வந்தார். அங்கு கால்நடைத்துறை டாக்டர்கள் பாபு, செல்வ மாரியப்பன், முகமது அப்துல்காதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் யானைக்கு பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால் தன்னால் பராமரிக்க முடியவில்லை என்று அசன் மைதீன் கூறி வந்தார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பலரும் உதவிக்கரம் நீட்டினர். இந்த நிலையில் யானையை முதுமலையில் உள்ள யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள யானைகளுடன் பராமரித்தால் விரைவில் குணமாகிவிடும் என்றும், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரி திருமால் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர், தாங்கள் அங்கு கொண்டு சென்று யானையை பராமரிப்பதாக கூறினார்கள். ஆனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு யானைக்கு வனத்துறை வழங்கக்கூடிய சான்றிதழ் முறையாக பெறப்படவில்லை. இதனால் யானையை கொண்டு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இருந்தாலும் டாக்டர் குழுவினர் யானைக்கு தினமும் ஊசி போட்டும், குளுக்கோஸ் ஏற்றியும் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு யானைக்கு உடல்நலக்குறைவு அதிகமாகி கீழே விழுந்தது. உடனே டாக்டர்கள் யானைக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலனின்றி யானை சுந்தரி பரிதாபமாக இறந்தது. இதனை அறிந்த யானை பாகன் ராஜேஷ், அசன்மைதீன் ஆகியோர் கதறி அழுதனர்.இதுபற்றி நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்வையிட்டு யானைக் கான சான்றிதழ்களை சரிபார்த்து, யானையை எங்கு அடக்கம் செய்யவேண்டும் என்ற இடத்தை தேர்வு செய்ய உள்ளனர். யானையின் அடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து டாக்டர் பாபு கூறுகையில், இந்த யானை 85 வயதானதால் பற்கள் விழுந்துவிட்டது. உடலில் அரிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. பற்கள் இல்லாததால் உணவுகளை சாப்பிட முடியவில்லை. அப்படி இருந்து யானைக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது என்றார்.