பூண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கடுமையான வெயில் காரணமாக பூண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்களை, ஊழியர்களை கொண்டு அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2018-09-03 22:45 GMT
சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில், மத்திய- தமிழக மீன்வளத்துறை இணைந்து மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மிதவை மீன் வளர்ப்பு தொட்டிகளை கொண்டு மீன்கள் வளர்க்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழைக்கு ஏரிக்கு வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததால் ஏரியில் இருந்த 64 மிதவை மீன் வளர்ப்பு தொட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.

எதிர்பாராதவிதமாக திடீரென அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அழுத்தம் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு டன் கணக்கில் மீன்கள் செத்தன. இதனால் சுமார் ரூ.1½ கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அதன்பிறகு தொடர்ந்து பூண்டி ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழைக்கு பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மீண்டும் மீன் வளர்ப்புக்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக சேதமடைந்த மிதவை மீன் வளர்ப்பு தொட்டிகளை சீரமைக்க மீன்வளத்துறை ரூ.10 லட்சத்தை ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 64 மிதவை தொட்டிகளில் 30 தொட்டிகளை மட்டும் சீரமைத்தனர். அவற்றில் வளர்க்கப்பட்டு வந்த மீன்களை டெண்டர் விடப்பட்டு அவ்வப்போது பிடித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் மார்ச் 26-ந் தேதி நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக தற்போது பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது. பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரிநீர் திறந்துவிடப்படும் மதகுகள் பகுதியில் மட்டும் 12 மில்லியன் கனஅடி தண்ணீர் தற்போது குளம்போல் தேங்கி நிற்கிறது. வெயிலின் வெப்பத்தால் தேங்கி நிற்கும் தண்ணீரில் உள்ள மீன்கள் நேற்று முன்தினம் செத்து மிதந்தன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரசேகர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் நேற்று தொழிலாளர்கள் பூண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்களை உடனடியாக அகற்றினர்.

மேலும் செய்திகள்