மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் முன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கம் பேச்சு

அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. விழாவில் பேசிய முன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கம், மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.;

Update: 2018-09-03 22:30 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோணத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி என்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் மொத்தம் 6 உள்ளது. இந்த பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 420 இடங்களுக்கு 400 மாணவ- மாணவிகள் கலந்தாய்வு மூலம் சேர்ந்துள்ளனர்.

முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நேற்று காலை கல்லூரியில் நடந்தது. இதையொட்டி கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த வகுப்பு தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் டி.வி.சிவசுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கி பேசினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் அனைவரும் எதிர்காலத்தில் சிறந்த என்ஜினீயர்களாக திகழ உங்களை நான் முதலில் வாழ்த்துகிறேன். மாணவ- மாணவிகள் தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவ- மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு புத்தக பயிற்சி மட்டும் போதாது. பொறியியல் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தகுதியான பொறியியல் மாணவ- மாணவிகள் அதிக அளவு தேவைப்படுகிறார்கள். அதனால் மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கல்லூரி இயற்பியல் துறை தலைவரும், முதலாமாண்டு வகுப்பு ஒருங்கிணைப்பாளருமான ஆதிமூலம் வரவேற்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் பேராசிரியர் பானுமதி நன்றி கூறினார். விழாவில் முதலாமாண்டு மாணவர்களில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் சேர்ந்து குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

பின்னர் முதலாமாண்டு மாணவ- மாணவிகளை ஆய்வுக்கூடத்துக்கு அழைத்துச்சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்