109 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

வாழையத்துவயலில் உள்ள 109 ஏக்கர் அரசு நிலத்தை கோர்ட்டு உத்தரவுப்படி மீட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2018-09-03 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மொத்தம் 267 மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், அவற்றின்மீது உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வாழையத்துவயலில் 109 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சொந்தம் கொண்டாடிய தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து 9 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் அரசு நிலத்தை மீட்டு எடுப்பதில் அக்கரையில்லை. சொந்தமாக வீட்டுமனை, வீடு இல்லாத உழைக்கும் மக்கள் மீது தமிழக அரசுக்கு அக்கரையில்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கர் அரசு நிலங்களை சுரண்டல் பேர்வழிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு எடுத்தால் குமரி மாவட்டத்தில் 2 லட்சம் குடும்பத்துக்கு தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க முடியும்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழையத்து வயல் அரசு நிலம் பற்றி எந்த அக்கரையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் மக்கள் பணியின் கடமையாளர்கள். எனவே வாழையத்து வயல் வழக்கு சாதகமாக முடிந்த நிலையில், அந்த நிலத்தை மீட்டு ஏழைகளுக்கு 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வாழையத்து வயல் அரசு நிலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி போராட்டத்தை தொடங்க உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு சிலுவையா தெருவை சேர்ந்தவர் எப்ரேம். இவருடைய மனைவி சகாயம் (வயது 47). இவர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர், தனது ஊரைசேர்ந்த ஒரு பெண், அவருடைய மகள் மருத்துவ படிப்பு செலவுக்காக சிலரது துணையுடன் தன்னிடம் இருந்து ரூ.42 லட்சம்  வாங்கி மோசடி செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரம் பகுதியில் உள்ள இமயம் இளைஞர் மன்ற தலைவர் நாகராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கணபதிபுரம் பேரூராட்சியில் 2016– 2017–ம் ஆண்டு அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் 800–க்கும் மேற்பட்ட பயனாளிகளை தேர்வு செய்து வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக பெரும்பாலானவர்கள் வீடு வேலை தொடங்கி அந்தந்த நிலைக்கு ஏற்ப முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் ஒரு ஆண்டு ஆகியும் மீண்டும் பணம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கேட்ட மக்களை ஏளனமாக பேசிய அதிகாரி மீதும், பணம் வழங்க காலதாமதம் செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக பணம் வழங்க உத்தரவு பிறபிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரீத்தாபுரம் பேரூர் தே.மு.தி.க. செயலாளர் ரவி தலைமையில், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கல்குளம் தாலுகா ரீத்தாபுரம் கிராமம் பத்தறை காலனி ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 18 பேருக்கு, 2002–ம் ஆண்டு கல்குளம் தாசில்தாரால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக பதிவேட்டில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு இதுவரையிலும் பட்டா வழங்கப்படவில்லை. பட்டா வழங்கப்பட்ட இடத்தை அப்பகுதியை சேர்ந்த வசதி படைத்த ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி வைத்துள்ளார். எங்களுக்கு அரசு வழங்கிய சொத்தை மீட்டு தருவதோடு, எங்களுக்கு பட்டாவும் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்