மனிதனின் சிறப்பு வகை மூளை உயிரணு!
மனித கண்டுபிடிப்புகளில் ஒன்றான கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை புத்திக்கூர்மையில் மனிதர்களையே மிஞ்சும்வகையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனாலும் அவற்றுக்கான விதைகளை ஊன்றியது மனித மூளைதான் என்பதை மறுப்பதற்கில்லை!
மனித மூளையின் குழந்தைகளான இன்றைய பல நவீன தொழில்நுட்பங்களை நாம் அனை வருமே பயன்படுத்தி வருகிறோம். ஆனாலும் மனித மூளை தொடர்பான போதிய புரிதல் மனிதனுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பதுதான் எதார்த்தம். மனித மூளையைப் பற்றிய அறிவியல்/ உயிரியல் உண்மைகளை கண்டறியும் ஆய்வுப்பயணத்தில், நம் புத்திக்கூர்மைக்கு, நாம் உயிர்த்திருப்பதற்கு காரணமான மூச்சு விடுதல், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடலியக்கங்களுக்கு காரணமான பல மூளைப்பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக கண்டுபிடிக்கப்பட்டு இன்று மனித மூளை- கம்ப்யூட்டர் இடைமுக கருவிகள் தொடங்கி சில மூளைக் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் வரை பல முன்னேற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், மனிதர்களின் மூளையில் மட்டுமே இருப்பதாக (தற்போது கருதப்படும்), ‘ரோஸ் ஹிப் நரம்பு (Rose Hip Neuron)’ எனும் ஒரு புதிய வகை மூளை உயிரணுவைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறது அமெரிக்காவில் உள்ள ஆலன் இன்ஸ்டிட்யூட் ஆப் ப்ரெயின் சயன்ஸ் (Allen Institute of Brain Science)-சைச் சேர்ந்த நரம்பியலாளர் ட்ரிக்வே பக்கென் தலைமையிலான ஆய்வுக்குழு!
கச்சிதமான, அடர்த்தியான வடிவம் கொண்ட மற்றும் பிற நரம்புகளின் தடை செய்யும் திறன்/செயல்பாடு கொண்ட இந்த ரோஸ் ஹிப் நரம்பு, இதுவரை மனிதர்களைத் தவிர ஆய்வுக்கூட விலங்கான எலி உள்ளிட்ட பிற உயிரினங்கள் எதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்களால் கொடை அளிக்கப்பட்ட மூளைத் திசுக்களில் உள்ள பல்வேறு வகையான மூளை உயிரணுக்களை உடற்கூறியல் மற்றும் மரபியல் அடிப்படையில் வகைப்படுத்தியபோது இந்த ரோஸ் ஹிப் நரம்பு கண்டறியப்பட்டு உள்ளது.
சுவாரசியமாக, இந்த ரோஸ் ஹிப் நரம்பு குறித்த தகவல் ஒரே சமயத்தில் இரு வேறு சோதனைக்கூடங்களில், வெவ்வேறு ஆய்வுக்குழுக்களால், வெவ்வேறு ஆய்வு முறைகளால் கண்டுபிடிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. நியோ கார்டெக்ஸ் (neocortex) என்று அழைக்கப்படும், சுருக்கங்களுடன் இருக்கக்கூடிய, மனித மூளையின் மேற்பரப்பு அல்லது லேயர் 1 (முதல் அடுக்கு)-ல் இருந்து எடுக்கப்பட்ட ஆய்வு மாதிரிகளில் இருந்தே ரோஸ் ஹிப் நரம்பு கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த லேயர் 1 பகுதியானது உணர்வுகளை உணர்தல்/உள்வாங்கல்-ஆக மாற்றும் மற்றும் பல்வேறு வகையான சிக்கலான உடலியக்கங்களை மேற்கொள்ள அவசியமான/காரணமானது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
ரோஸ் ஹிப் நரம்புகள் நுண்ணோக்கியின் கீழே ஆய்வு செய்யப்பட்டபோது, ஒரு ரோஜா பூவின் இதழ்களை நீக்கிய பின்பு மீதமிருக்கும் பூவின் பகுதியைப் போலவே ரோஸ் ஹிப் நரம்புகள் இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மிகவும் சுவாரசியமாக, ரோஸ் ஹிப் நரம்பின் மேற்சவ்வில் ஒட்டிப் போர்த்தியிருக்கும் பல்வேறு வகையான புரதங்களே, அதனை பிரத்யேகமான ஒரு புதிய நரம்பாக நிர்ணயிக்க காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், இந்த புதிய நரம்பு மனிதர்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது தவிர, மிகவும் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட எலியின் நரம்பியல் மண்டலத்திலும் கூட ரோஸ் ஹிப் நரம்புகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், மூளையில் ரோஸ் ஹிப் நரம்பு இருக்குமிடம், உடற்கூறியல் மற்றும் அதனால் தூண்டப்படும் மரபணுக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ரோஸ் ஹிப் நரம்பு GABAergic interneuron எனும் நரம்பின் உள்வகைகளுள் ஒன்று என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வகை நரம்பு உயிரணுக்கள், நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் எனப்படும் நரம்பு தூண்டி ரசாயனமான காமா-அமினோ பியூட்டிரிக் அமிலம் (gamma-Aminobutyric acid)-ன் தூண்டுதலில் சில சமிக்ைஞகளை தடை செய்தும், வேறு சில சமிக்ஞைகளை அதிகப்படுத்தியும் செயல்படும் தன்மை கொண்டவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
முக்கியமாக, மூளையின் நியோகார்டெக்ஸ்சில் உள்ள லேயர் 1 பகுதியில் இருக்கும் ரோஸ்ஹிப் நரம்புகள் அதிக எண்ணிக்கையில் இல்லாமற் போனாலும், மூளை முழுக்க படர்ந்து உறுதியான வலையமைப்பு கொண்டவையாக இருக்கின்றன என்பதும், நியோகார்டெக்ஸ் பகுதியின் ஆழத்தில் இருக்கும் பிரமிடல் செல்கள் (pyramidal cells)-ல் இருந்து வெளியாகும் சமிக்ஞைகளை தடை செய்வதன் மூலமாக மூளையின் செயல்பாட்டுக்கு அவசியமாகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக மொத்தத்தில், ரோஸ் ஹிப் நரம்புகள் மீதான மேலதிக ஆய்வுகள், மனித மூளை மட்டுமல்லாமல், நம்முடைய பெரும்பாலான நரம்பியல் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்துவரும் எலிகளின் மூளை மற்றும் அதன் செயல்பாடு குறித்த மேலதிக புரிதலை ஏற்படுத்தி பல நரம்பியல் மருத்துவ முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.