குழந்தைகளை கண்டிக்காமல் படிக்க வைக்க...

தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்காக வழிநடத்துவதில்தான் பெரும்பாலான பெற்றோர் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்.

Update: 2018-09-03 09:58 GMT
‘படி...படியென்று பாடாய்படுத்துவது’, ‘சின்னச்சின்ன தவறுகளை பெரிதுபடுத்துவது’, ‘குழந்தையின் செயல்களுக்கு தடைபோடுவது’ என பெற்றோர் செய்யும் தவறுகள் ஏராளம். குழந்தைகளை கண்டிக்காமல், அவர்களின் போக்கில்விட்டு, மெதுவாக படிப்பின் பக்கமாக கவனத்தை திருப்ப வைப்பது அவர்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதற்கான சில வழிகள்...

முன்மாதிரியாக இருங்கள் : குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை படிக்கச் சொல்லிவிட்டு பெற்றோர் டி.வி. பார்ப்பதும், தாங்கள் அதிகமாக செல்போனை பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளை போனை தொடக்கூடாது என்பதும் முரண்பட்ட முன்னுதாரணமாகும். குழந்தைகள் படிக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுடன் படியுங்கள், குழந்தைகள் கண்டதையும் விளையாடக்கூடாது என்றால் நீங்கள் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்கள் தவறாகப் பேசக்கூடாது என்றால், நீங்கள் அவர்களுக்கு முன்பு அப்படி பேசாதீர்கள்.

தடை செய்யாதீர்கள் : குழந்தைகளின் செயல்களை தடை செய்யாதீர்கள். டம்ளரை தரையில்தட்டி விளையாடுவதை, பொம்மைகளை பிரித்துப் பார்க்கும் குழந்தைகளை, கோபம் கொந்தளிக்க கண்டிக்கக் கூடாது. டம்ளரின் ஓசையை ரசிக்கும் குழந்தை இசைப்பிரியராகவும், இசை மேதையாகவும் வளரலாம். பொம்மைகளைப் பிய்த்துப் போடுவது அவர்களின் பொறியாளர் எண்ணத்தை காண்பிப்பதாக இருக்கலாம். குழந்தைகள் பிரித்து, உடைத்து, எறிந்து விளையாடுவார்கள் என்பதை அறிந்த நீங்கள், பிரித்துப் பொருத்தும் விளையாட்டுப் பொருட்களையோ, உடையாத தரமான விளையாட்டுப் பொருட்களையோ வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் தவறும், குறைந்து போகும், அறிவும் விருத்தியாகும்.

பாராட்டுதான் விமர்சனம் : உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ‘அவனைப்பாரு, அவளைப்பாரு எப்படி படிச்சிருக்காங்க, நீயும் இருக்கியே...’ என்பதுபோல பேச வேண்டாம். மற்றவர்கள் மட்டம் தட்டினாலும், பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். பாடத்தில் ஏதாவது கோட்டைவிட்டால், ‘நீங்க சமர்த்து அடுத்த முறை நிறைய மார்க் வாங்க வேண்டும், உங்களால முடியுமில்ல’ என்று இதமாகச் சொல்லிவிட்டு வேறுவிஷயத்திற்கு சென்றுவிட வேண்டும். அதையே மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்விதமாக பலமுறை நினைவூட்டி பேசி குழந்தைகளை மட்டம் தட்டக் கூடாது.

படிக்க வேண்டுமா? : குழந்தைகளுக்கு படிப்பின் மீது விருப்பம் வர வேண்டுமானால், அவர்களுக்கு புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். புத்தகத்தை கிழிக்கிறாயா, இதை தொடக்கூடாது என்று பிடுங்கி வைக்க வேண்டாம். சிறுவயது முதலே, கிழித்தாலும் பரவாயில்லை என்று பழைய புத்தகங்களை கொடுத்துப் பழக்குங்கள், அவர்கள் புத்தகத்தை புரட்டட்டும், கிழிக்கட்டும். இப்போதெல்லாம் குழந்தை களால் கிழிக்க முடியாத புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது நல்லவிஷயம். சிறிதுகாலம் புத்தகத்துடன் அப்படி உறவு வளர்க்கும் குழந்தைகள் வளர வளர பெரிய புத்தக ரசிகனாகவும், புத்திசாலி குழந்தையாகவும் வளர்ந்துவிடும் கவலை வேண்டாம்.

கதைகளால் வழிநடத்துங்கள் : குழந்தைகளின் தவறுகளை திருத்தவும், அவர்களை மேதைகளாக்கவும், கண்டிப்பதும், அடித்து உதைப்பதும் சிறந்த வழியல்ல. கதை சொல்வதுதான் அதற்கு சரியானது. “ஒரு ஊர்ல ஒரு கெட்ட பையன் இருந்தானாம். அவன் நிறைய சாக்லெட் சாப்பிட்டானாம், பல் எல்லாம் சொத்தையா போச்சாம்...” என்று சொல்லும் கதைகள், நீங்கள் அடித்து திருத்துவதைவிட ஆயிரம் மடங்கு குழந்தைகளின் மனதில் படிப்பினையை ஏற்படுத்தும். ஆனால் கதையை அவர்கள் தவறு செய்யும்போது கூறாமல், அவர்கள் விருப்பமாக உங்களுடன் பேசும்போது கூறுங்கள். இது உங்கள் உறவையும் வளர்க்கும், குழந்தையின் அறிவையும் பெருக்கும்.

மேலும் செய்திகள்