நெல்லையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் படுகாயம் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

நெல்லையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

Update: 2018-09-02 23:55 GMT

நெல்லை,

நெல்லையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

தாறுமாறாக ஓடிய கார்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 28). இவர் நேற்று மாலையில் தனது காரில் தச்சநல்லூரில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டு இருந்தார். கார் உடையார்பட்டி அருகில் வந்தபோது அந்த வழியாக சைக்கிளில் வந்தவர் மீது மோதிவிட்டு தாறுமாறாக சென்றது. இதைத்தொடர்ந்து கார் வேகமாக பைபாஸ் ரோட்டில் உள்ள ஆற்றுபாலம் அருகே சென்றது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. உடனே அந்த பகுதியில் இருந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். பின்னர் வேலாயுதத்தை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கைது

இதுகுறித்து உடனடியாக நெல்லை மாநகர போக்குவரத்து கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு காலதாமதம் ஆனதால் உடையார்பட்டி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வேலாயுதத்தை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்