தடுப்புக்கட்டையில் ஆட்டோ மோதி கவிழ்ந்தது; 14 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2018-09-02 23:41 GMT
உளுந்தூர்பேட்டை, 


உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று இரவு 14 பயணிகளுடன் ஆட்டோ ஒன்று எடைக்கல் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே சாலி என்ற இடத்தின் அருகில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த எடைக்கல்லை சேர்ந்த பரமசிவம் (வயது 40), மணிகண்டன்(27), செல்வி(30), கஸ்தூரி(35), ஆகாஷ்(13), வெங்கடேசன்(45) உள்ளிட்ட 14 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் விபத்தில் காயமடைந்த 14 பேருக்கும் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதன் பிறகு உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டதும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த குமரகுரு எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார். 

மேலும் செய்திகள்