வனத்துறையினர் தடையால் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்
வருசநாடு அருகே வனத்துறையினர் தடையால் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே தும்மக்குண்டு, உரக்குண்டான்கேணி, காந்திகிராமம், கோடாலியூத்து, கல்லுருண்டான்சுனை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களிலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடாலியூத்து, காந்திகிராமம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை.
இந்த கிராம மக்கள் மணல் குண்டும் குழியுமான மலைப்பாதையை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதேபோல உரக்குண்டான்கேணி, சாந்திநகர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி இருந்தும் அதிக அளவில் சேதமடைந்து காணப்பட்டது. எனவே உரக்குண்டான்கேணி, சாந்திநகர் உள்ளிட்ட கிராமங்களின் சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும் காந்திகிராமம், கோடாலியூத்து உள்ளிட்ட கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சீலமுத்தையாபுரம் கிராமத்தில் இருந்து காந்திகிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தது.
பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் குறிப்பிட்ட அளவு நிலம் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வருவதாக கூறி சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். எனவே 1 கி.மீ அளவிலான பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. எனவே 1 கி.மீ தொலைவு இடைவெளி உள்ளதால் புதிய தார்சாலை அமைக்கப்பட்டும் கூட ஆட்டோ, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதேபோல உரக்குண்டான்கேணி, கல்லுருண்டான்சுனை, கருமலைசாஸ்தாபுரம், மண்ணூத்து, உருட்டிமேடு உள்ளிட்ட கிராமங்களிலும் வனத்துறையினர் விதித்த தடை காரணமாக சாலை அமைக்கும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.
எனவே இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விளைபொருட்களை தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் புதிய தார்சாலை அமைக்கவோ அல்லது சீரமைப்பு செய்யவோ வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.