தூத்துக்குடியில் போலீசார் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு வாகன தணிக்கையில் நடவடிக்கை எடுத்ததால் விபரீத முடிவு

தூத்துக்குடியில் வாகன தணிக்கையின் போது நடவடிக்கை எடுத்ததால் போலீசார் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-02 23:15 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வாகன தணிக்கையின் போது நடவடிக்கை எடுத்ததால் போலீசார் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன தணிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று மாலையில் தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தினர். அவர் மது குடித்து இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த வாலிபர் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், மோட்டார் சைக்கிளை மட்டும் திருப்பி தருமாறு கேட்டாராம். ஆனால் போலீசார் மறுத்து விட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டாராம். சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் பெட்ரோல் பாட்டிலுடன் வி.வி.டி. சிக்னலுக்கு வந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார் முன்னிலையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்