நெமிலி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி: நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
நெமிலி அருகே நண்பர்களுடன் குளித்த வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
பனப்பாக்கம்,
நெமிலியில் உள்ள பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் துரை (வயது 50). இவருடைய மகன் நவீன்குமார் (23). சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று விடுமுறைநாள் என்பதால் ஊருக்கு வந்திருந்தார்.
மதியம் நவீன்குமார், தனது நண்பர்களுடன் புன்னை கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நவீன்குமார் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை.
உடனே கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். நெமிலி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களும், நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று நவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப்பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக நவீன்குமாரின் உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து துரை நெமிலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.