ஸ்கூட்டி மீது தண்ணீர் லாரி மோதி விபத்து கல்லூரி மாணவி தலை நசுங்கி சாவு விராரில் பரிதாபம்
விராரில் ஸ்கூட்டி மீது தண்ணீர் லாரி மோதியதில், லாரி டயரில் சிக்கிய கல்லூரி மாணவி தலை நசுங்கி உயிரிழந்தார்.;
வசாய்,
விராரில் ஸ்கூட்டி மீது தண்ணீர் லாரி மோதியதில், லாரி டயரில் சிக்கிய கல்லூரி மாணவி தலை நசுங்கி உயிரிழந்தார்.
கல்லூரி மாணவி
பால்கர் மாவட்டம் விராரை சேர்ந்த கல்லூரி மாணவி சாய்டா தஸ்னீம் (வயது18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாணவி கல்லூரி சென்றுவிட்டு தனது ஸ்கூட்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
விரார் மேற்கு பகுதியில் உள்ள ரஸ்டோம்ஜி கேம்பிரிட்ஜ் சர்வதேச பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி ஒன்று மாணவியின் ஸ்கூட்டி மீது மோதியது.
இதில் ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி கொண்டார். சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்ணீர் லாரி டிரைவர் பயத்தில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த அர்னாலா போலீசார் மாணவி சாய்டா தஸ்னீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.