‘பேஸ்புக்’கில் வேலை வாய்ப்பு பதிவை போட்டு ரூ.6½ லட்சம் மோசடியில் ஈடுபட்டவருக்கு வலைவீச்சு
‘பேஸ்புக்’கில் வேலை வாய்ப்பு பதிவை போட்டு ரூ.6½ லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
‘பேஸ்புக்’கில் வேலை வாய்ப்பு பதிவை போட்டு ரூ.6½ லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
‘பேஸ்புக்’கில் விளம்பரம்
மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது30). கார் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் ‘பேஸ்புக்’கில் வேலை வாய்ப்பு விளம்பரம் ஒன்றை பார்த்தார். மேலும் அந்த விளம்பரத்தை பதிவேற்றம் செய்த டெல்லியை சேர்ந்தவரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அந்த நபர் வெளிநாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு ஆள் எடுப்பதாகவும், ரூ.1½ லட்சம் தந்தால் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதை நம்பிய பிரதீப் குமார் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தார். மேலும் அவரது நண்பர்களையும் அந்த நபரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
ரூ.6½ லட்சம் மோசடி
இந்தநிலையில் பிரதீப் குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் அந்த நபாிடம் வேலைக்காக ரூ.6½ லட்சம் கொடுத்து இருந்தனர். ஆனால் பணத்தை வாங்கிய பிறகு அந்த நபரை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் 4 பேரும் இதுகுறித்து மும்பை சைபர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.