பிரதமர் மோடி ஆட்சியில் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரிக்கவில்லை ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்

பிரதமர் மோடி ஆட்சியில் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரிக்கவில்லை என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-02 22:30 GMT
மும்பை, 

பிரதமர் மோடி ஆட்சியில் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரிக்கவில்லை என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர்கள், தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் வழக்குகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து மத்திய மந்திரியும், குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று கூறியதாவது:-

சாதி ரீதியான கலவரங்கள் நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்றன. எந்த அரசு பதவியில் இருந்தாலும் இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் தான் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக கூறுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால் அது தொடர்ச்சியாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் கட்சி இதை ஊக்குவிக்கவில்லை. இருப்பினும் அரசு இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசியலாக்க கூடாது

தலித்துகளின் மீதான தாக்குதல்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் நடக்கக்கூடும் என்பதால் இந்த பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்க கூடாது.

இந்த பிரச்சினையை நாம் ஒரு சமூக கண்ணோட்டத்தில் தான் பார்க்கவேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளின் புள்ளிவிவரத்தின் படி நாடுமுழுவதும் ஆண்டுதோறும் தலித்துகள் மீது மட்டும் 45 ஆயிரம் முதல் 46 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் பகுதிகளில் தலித்துகள் தாக்கப்படுவது விமர்சிக்கப்படுகிறது.

இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

மேலும் செய்திகள்