வாகனங்களின் வேகத்தை கண்டறியும் வகையில் மும்பையில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்
வாகனங்களின் வேகத்தை கண்டறியும் வகையில் மும்பையில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மும்பை,
வாகனங்களின் வேகத்தை கண்டறியும் வகையில் மும்பையில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நவீன கண்காணிப்பு கேமராக்கள்
மும்பையில் கடந்த ஆண்டு 1,510 இடங்களில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பெண்களை மானபங்கம் செய்பவர்கள், நகை பறிப்பவர்கள், கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளிகள் எளிதில் பிடிபடுகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளும் கண்காணிப்பு கேமராக்களில் சிக்குகின்றனர்.
இதையடுத்து மும்பையில் உள்ள சாலைகளில் மேலும் பல அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலையில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை கூட கண்டறிய முடியும். மேலும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை கூட துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.
சோதனை முயற்சி
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-
சமீப காலமாக கிழக்கு, மேற்கு விரைவு சாலைகளில் வாலிபர்கள் அதிகளவு மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்க இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருக்கும். மேலும் சோதனை முயற்சியாக மும்பையில் முதற்கட்டமாக 50 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.