சடையநேரி, புத்தன்தருவை குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் கோரிக்கை

சடையநேரி, புத்தன்தருவை உள்ளிட்ட குளங்களில் விரைந்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2018-09-02 21:30 GMT

தூத்துக்குடி,

சடையநேரி, புத்தன்தருவை உள்ளிட்ட குளங்களில் விரைந்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

வறட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், உடன்குடி யூனியன்கள் மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளன. உடன்குடி யூனியனில் சடையநேரி குளம், புத்தன்தருவை, தாங்கைகுளம் ஆகிய குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே போதுமான அளவுக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. கடல் நீர் உட்புகுந்ததால், நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக மாறிவிட்டது. இதனால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தனிக்கால்வாய்

இந்த பகுதியில் பொதுமக்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டு முழுவதும் குளங்களில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வழிமுறைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி ஆற்றின் மூலம் தண்ணீர் பெறும் சடையநேரிகுளம், புத்தன்தருவை குளம் உள்ளிட்ட 53 குளங்களையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து, அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும். சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்தது. அதே நேரத்தில் சடையநேரி கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரால், சடையநேரி குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனால் புத்தன்தருவை உள்ளிட்ட குளங்கள் வறண்டு கிடக்கின்றன. தற்போது அணைகள் நிரம்பி உள்ளன.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்யும் போது, ஆற்றில் தண்ணீரை திறந்து விடும் சூழல் ஏற்படும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் தாமிரபரணி ஆற்றில் தற்போது இருந்தே தண்ணீரை திறந்து விட்டு சடையநேரி, புத்தன்தருவை, தாங்கைகுளம் உள்ளிட்ட அனைத்து குளங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்