நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்
மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று கடலூர்,விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கடலூர் மாவட்டத்தில் 49 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திடீரென மூடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று மாலை நேரடி நெல்கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்படும் என்று அறிவித்தது.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் அவசியம் குறித்து கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அரசு மூடியது. இந்த நிலையில், மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என்று அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் 500 முதல் 1,000 மூட்டைகள் வரை எடை போடுவதற்காக வைத்திருந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்ததால் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை.
எப்படியும் தங்களது நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மானாவாரி பயிர் செய்த விவசாயிகள் தற்போது தான் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எங்கே கொண்டு செல்வார்கள். ஆகவே மத்திய அரசின் உத்தரவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய் வதை மறுக்கக்கூடாது. இதில் தமிழக அரசு தலையிட்டு நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்அனுவம்பட்டு ரவீந்திரன்:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் காலம் அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை என்று மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சம்பா சாகுபடி முடிந்து, ஜனவரி மாதத்தில் திறந்து, ஏப்ரல் மாதத்தில் மூடுவதும், தேவைக்கேற்ப குறுவை சாகுபடி அறுவடைக்கு திறப்பதும் வழக்கம்.
ஆனால் தற்போது மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதால், உரிய காலத்தில் விவசாயிகள் நெல் அறுவடை செய்ய முடியவில்லை. இதனால் காலதாமதமாக அறுவடை செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது என்பது விவசாயிகள் நலனுக்கு எதிரான செயல் ஆகும். எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தடையின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.
நாங்கள் நெல் கொள்முதல் செய்ய 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டிவனத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் கால விரயமும் அதிக செலவும் ஆகிறது. மேலும் புறவழிச்சாலையை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. பணப்பட்டுவாடாவும் உடனே செய்வதில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்த பின்பு, ஆவணிப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் 30 கிராம விவசாயிகள் பயன் அடைந்தனர். பணப்பட்டுவாடாவும் உடனுக்குடன் நடந்தது. இதனால் எக்காரணத்தை கொண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அரசு மூடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள வேளா ண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலை க்கே கொள்முதல் செய்கின்றனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளை, உள்ளூர் வியாபாரிகள் தடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கோதண்டபாணிபுரம் அருகிலும், சித்தலிங்கமடத்திலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்ததால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லுக்கு உரிய விலையை உடனே பெற்று வந்தனர். இதற்கிடையே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என்றார்.