ஊத்துக்குளி அருகே மாமனாரை கொலை செய்த வழக்கில் காவலாளி கைது
ஊத்துக்குளி அருகே மாமனாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.;
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே உள்ள மோனக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 55). சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் வனிதா இவரது கணவர் பாலச்சந்தர் (40) இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். பாலச்சந்தர் தனது மாமனார் வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாலச்சந்தர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி வனிதா தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே அவர் தனது மகள் வீட்டுக்குச் சென்று மருமகன் பாலசந்தரை கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மாமனாரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே பாலச்சந்தர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பாலச்சந்தர் தளவாய்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தினகரன் முன்னிலையில் சரணடைந்தார். உடனே இதுபற்றி ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார், பாலச்சந்தரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பாலச்சந்தர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தனது மாமனார் அவசர தேவைக்காக தன்னிடம் ரூ 1½ லட்சம் கடனாக பெற்று இருந்ததாகவும், அதில் ரூ.30 ஆயிரத்தை மட்டும் இதுவரை திருப்பி தரவில்லை என்றும் கூறினார். இதனால் அந்த பணத்தை வாங்கி வரும்படி, எனது மனைவியிடம் தகராறு செய்ததாகவும், அதை தட்டிக்கேட்கவந்த மாமனாரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, பாலசந்தரை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.