குமரி மாவட்டத்தில் மேலும் 2 கோவில்களில் கொள்ளை மர்ம ஆசாமிகள் அட்டூழியம் தொடர்கிறது

குமரி மாவட்டத்தில் மேலும் 2 கோவில்களில் சாமி சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மர்ம ஆசாமிகள் அட்டூழியம் தொடர்கிறது.

Update: 2018-09-02 23:15 GMT
கருங்கல்,

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் மகாதேவர் கோவிலில் கடந்த 31-ந் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து சாமி சிலைகள், நகைகள், காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே நாளில் மகாதேவர் கோவில் அருகில் உள்ள மற்றொரு தேவி கோவிலிலும் கொள்ளையர்கள் புகுந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

திக்குறிச்சி வடக்கே புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 51), ஜோதிடர். இவருக்கு சொந்தமான தேவி கோவில் அந்த பகுதியில் உள்ளது. இவர் கடந்த 31-ந் தேதி குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் சந்திரசேகரன் திரும்ப வந்த போது, தேவி கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்கு இருந்த பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் தேவி சிலை, 3 தங்க பொட்டு, வெள்ளி காசுகள் போன்றவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள்தான் இந்த கோவிலிலும் கைவரிசை காட்டியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சந்திரசேகரன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருங்கல் அருகே கம்பிளாரில் சங்கர நாராயணர் குளத்து மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம்போல் பூசாரி கதவை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பூசாரி கோவிலை திறக்க சென்ற போது முன்பக்க கதவு கல்லினால் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

சாமிக்கு அணிவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிமுகம், 4 தங்க பொட்டு, தங்க ருத்ராட்ச மாலை போன்றவை மாயமாகி இருந்தன. அதே நேரத்தில் சாமியின் வெண்கல முகம் வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தது.

இரவு மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், காணிக்கை பணத்தை கொள்ளையடித்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சாமியின் வெண்கல முகத்தை திருடிய கொள்ளையர்கள் அதன் மதிப்பு குறைவாக இருப்பதால் அதை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் தலைவர் பால்ராஜ் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் கோவில் வளாகத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி ஆப்பிகோடு பகுதியில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

மேலும்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளையடித்த கும்பல் கோவில் கதவை கல்லினால் உடைத்துவிட்டு, சிலைகளை கொள்ளையடித்தனர். அதுபோல், கம்பிளாரில் உள்ள கோவிலிலும் கதவு கல்லினால் உடைக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த சம்பவங்களில் ஒரு கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.

குறிப்பாக சிலை கடத்தல் கும்பல் மாவட்டத்தில் முகாமிட்டு ஒவ்வொரு பகுதியாக கோவிலில் கொள்ளையடித்து வருவதாக தெரிகிறது. தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்