சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மங்களூரு,
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுமி கடத்தி பலாத்காரம்
மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட மித்தபயலு கிராமத்தை சேர்ந்தவர் எத்தீஷ் (வயது 22). இவர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்கு நின்று கொண்டிருந்தாள். அவளை, எத்தீஷ் ஏமாற்றி சூரத்கல்லில் உள்ள தனது வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார்.
அங்கு வைத்து, அவர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி இதுபற்றி யாரிடமும் கூறவில்லை.
வாலிபர் கைது
இந்த நிலையில் சிறுமி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். இதனால் அவளுடைய பெற்றோர், சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவளுடைய பெற்றோர், இதுகுறித்து உல்லால் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து எத்தீசை கைது செய்தனர்.
4 ஆண்டு சிறை
பின்னர் அவர் மீது மங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், எத்தீஷ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தர விட்டார்.