தலைமுடி கொட்டியதால் லட்சுமண தீர்த்த நதியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை அழகு நிலையம் மீது பெற்றோர் புகார்
தலைமுடி கொட்டியதால் லட்சுமண தீர்த்த நதியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
குடகு,
தலைமுடி கொட்டியதால் லட்சுமண தீர்த்த நதியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு அழகு நிலையம் தான் காரணம் என கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
கல்லூரி மாணவி மாயம்
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொன்னம்பேட்டை அருகே நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபா. இவருடைய மனைவி சைலா. இந்த தம்பதியின் மகள் நேகா கங்கம்மா (வயது 19). இவர் மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார். இவர் மைசூருவில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி, தங்கும் விடுதியில் இருந்து திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர்கள் மைசூரு போலீசில் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் போலீசார் நேகாவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தற்கொலை
இந்த நிலையில், நேற்று காலை நிட்டூர் பகுதியில் ஓடும் லட்சுமண தீர்த்த நதியில் ஒரு பெண் உடல் மிதப்பதாக பொன்னம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதேப்பகுதியை சேர்ந்த நேகா என்பது தெரியவந்தது. மேலும் அவர், லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தலைமுடி கொட்டியதால்...
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நேகா மைசூருவில் உள்ள அழகு நிலையத்தில் தனது தலைமுடியை அழகாக வெட்டுவதற்காக சென்றார். அப்போது அந்த அழகு நிலையத்தில் நேகாவின் தலைமுடிக்கு பயன்படுத்திய கெமிக்கலால், அவருக்கு தொடர்ந்து தலைமுடி கொட்டியுள்ளது. நாளாக, நாளாக அவருக்கு தலைமுடி அதிகமாக கொட்டியதால், நேகா கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
அவருடைய குடும்பத்தினர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் சரிபடுத்தி விடலாம் என்று அவரிடம் சமாதானம் கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் தலைமுடி கொட்டுவது நிற்காததால், அவர் கடந்த 28-ந்தேதி, யாரிடமும் கூறாமல் நிட்டூருக்கு வந்து, அங்கு லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதற்கிடையே நேகாவின் பெற்றோர் பொன்னம்பேட்டை போலீசில், மைசூரு அழகு நிலையம் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில், எங்களுடைய மகள் தற்கொலைக்கு மைசூருவில் உள்ள ஒரு அழகு நிலையம் தான் காரணம். அங்குள்ளவர்கள் எனது மகளின் தலையில் பயன்படுத்திய கெமிக்கலால் தான் அவருக்கு தலைமுடி கொட்டியது என்று கூறியிருந்தனர்.
அதன்பேரில் பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.