லாரி மீது கார் மோதி அரிசி ஆலை அதிபர் பலி, 3 பேர் படுகாயம்

நின்று இருந்த லாரி மீது கார் மோதியதில் அரிசி ஆலை அதிபர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-09-02 22:15 GMT

திருமங்கலம்,

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த வன்னியராஜ் என்பவருஐடய மகன் கமல் (வயது40). அரிசி ஆலை அதிபரான இவர் தன்னுடைய மனைவி பிரகன்யா(35), மகள் கிரிஷ்சாலா(5), மகன் கிரிஷ்வன்னியாராஜ் (4) ஆகியோருடன் காரில் சென்னை சென்றனர். நேற்று முன்தினம் இவர்கள் சென்னையில் நடைபெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று அதிகாலை தூத்துக்குடி நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர்.

திருமங்கலம் அருகே கரிசல்பட்டி நான்குவழிச்சாலையில் வரும்போது, ஊட்டியில் இருந்து மார்த்தாண்டத்திற்கு டீத்தூள் ஏற்றிச்சென்ற லாரி நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக காரில் வேகமாக வந்த கமல் லாரி நின்று இருந்ததை கவனிக்காததால் லாரியின் பின்புறம் மோதினார். இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த கமல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ½ மணி நேரம் பேராட்டத்திற்கு பின்பு கமலின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நொறுங்கிய காரில் சிக்கி படுகாயம் அடைந்த கமலின் மனைவி, மகன், மகள் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் நகர் போலீசார் லாரியை ஓட்டி வந்த பிரபுவிடம் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்