வால்பாறையில் வீடுகள், அலுவலகத்தை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் வீடுகள், அலுவலகத்தை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதையடுத்து வனத்துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2018-09-02 22:45 GMT

வால்பாறை,

வால்பாறை வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி மற்றும் ஆண்டு தோறும் இடம்பெயர்தல் காரணமாக காட்டு யானைகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கேரள வனப்பகுதிக்கு செல்ல தொடங்கின. இந்த நிலையில் நேற்று முன்தினம் மானாம்பள்ளி எஸ்டேட் வனப்பகுதிக்குள் நள்ளிரவு 1 மணியளவில் 2 குட்டிகளுடன் 6 யானைகள் புகுந்தன.

பின்னர் எஸ்டேட் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை உடைத்த யானைகள் துதிக்கையை உள்ளே விட்டு அலுவலகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தின. பின்னர் அருகே இருந்த எஸ்டேட் நிர்வாக இயக்குனர் மற்றும் மேலாளரின் வீடுகளை சேதப்படுத்தி உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தின. இதை பார்த்த எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்களுடன் இணைந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதேபோல் வரட்டுப்பாறை வனப்பகுதிக்குள் நின்றிருந்த 2 காட்டு யானைகள் நசீர் என்பவரின் டீக்கடை கதவுகளை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை எடுக்க முயற்சி செய்தது. அதற்குள் நசீர் எஸ்டேட் தொழிலாளர்களுடன் சென்று யானைகளை விரட்டியடித்தார்.

கேரளாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற காட்டு யானைகள் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது வால்பாறை வனப்பகுதிக்கு திரும்பி உள்ளன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வால்பாறையில் கன மழை கொட்டியதால் யானை அட்டகாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து அட்டகாசத்தை தொடங்கி உள்ளன.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து உத்தரவின்பேரில் வனச்சரகர் சக்தி கணேஷ் தலைமையில் வனவர்கள், வனக்காவலர்கள், வனப்பாதுகாவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் விடிய விடிய ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். எஸ்டேட் பகுதிகளில் கடைக்காரர்கள் தங்களது கடைகள், வீடுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் தீ மூட்டியும், வண்ண விளக்குகளை எரிய விட்டும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது. பின்னர் யானைகள் எஸ்டேட் கேண்டீன் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த உணவு பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சேதப்படுத்தியது. இதை அறிந்து அங்கு வந்த தொழிலாளர்கள் காட்டு யானைகள் விரட்டியடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

கேரள வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி உள்ளன. இதனால் எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வீடுகளை விட்டு வெளியே வரும் போது கவனமாக இருக்கவேண்டும்.

எஸ்டேட் நிர்வாகங்கள் தங்களது எஸ்டேட் தொழிலாளர்களை தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு அனுப்புவதற்கு முன்பு தேயிலைத் தோட்ட பகுதிகளை ஓட்டிய வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ளது என சந்தேகம் இருந்தால் வனத்துறையினரிடம் கேட்டு பின்னர் தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்