முள்ளூர்துறையில் 1,200 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

முள்ளூர்துறையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-09-02 22:45 GMT
கருங்கல்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி, மண்எண்ணெய் கடத்துவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

கருங்கல் அருகே முள்ளூர்துறை பகுதியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில்,  துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் முள்ளூர்துறை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது முள்ளூர்துறை ரே‌ஷன்கடை அருகே சாக்கு மூடைகள் அடுக்கி வைத்து தார்பாயால் மூடப்பட்டு இருப்பதை கண்டனர். சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அந்த தார்பாயை அகற்றி சாக்கு மூடைகளை சோதனையிட்டனர். அப்போது, மூடைகளில் 1,200 கிலோ ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அரிசி மூடைகளுக்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் நின்றது. இந்த அரிசி மூடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மோட்டார் சைக்கிள் மூலம் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. ஆனால், அவற்றை உரிமை கோர யாரும் வரவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், மோட்டார் சைக்கிளை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

மேலும், அரிசியை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்