கண்மாய் மராமத்து பணியின் போது குடிநீர் குழாய்கள் சேதம், பெண்கள் போராட்டம்

திருவெற்றியூர் கண்மாய் மராமத்து பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. அதனை தொடர்ந்து பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-02 22:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் உள்ள பெரிய கண்மாயில் தற்போது குடிமாராமத்து முறையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் திருவெற்றியூர் ஊராட்சியின் தனி குடிநீர் திட்ட குழாய்கள் சேதமடைந்து விட்டன. இதனால் திருவெற்றியூர், அரும்பூர், குளத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு கடுமையான குடிநீர் பிரச்சினை எழுந்துள்ளது.

பொதுமக்கள் தினமும் பல மைல் தூரம் அலைந்து நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். ஆனால் சேதமடைந்த குழாய்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருவெற்றியூர் ஊராட்சி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் வந்து கண்மாய் மராமத்து பணியில் ஈடுபட்டு வரும் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்மாய் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரரே சேதமடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதனைதொடர்ந்து ஒப்பந்தகாரர் உடைப்பை சரி செய்ய குழாய்கள் வாங்கி தருவதாக ஒப்புக்கொண்டார். பின்னர் திருவெற்றியூர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற பெண்கள் குழாய்கள் உடைப்பை சீரமைக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று குடிநீர் வழங்க வேண்டும். தவறினால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து திருவெற்றியூர் கிராம மக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவெற்றியூர் பெரிய கண்மாய் தூர்வாரும் பணியால் சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டனர். இதனால் கடந்த 12 நாட்களாக திருவெற்றியூர் உள்பட 3 ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். இதனை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என யூனியன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கு அதிகாரிகள் பொதுப்பணித்துறை மூலம் தான் கண்மாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் தான் சீரமைக்க வேண்டும் என கூறிவிட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் யூனியன் நிர்வாகம் தான் சீரமைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

 இதனால் நாங்கள் பெரும் அவதிக்கும் அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகியுள்ளோம். எனவே கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இப்பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்