பிரச்சினைகளை தீர்க்கும் பெண்கள் படை

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் 83 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Update: 2018-09-02 07:04 GMT
சராசரியாக பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 39 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வழக்குப்பதிவு செய்யப்படாத குற்றச் செயல்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிக்கொண்டிருக்கிறது. பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது சவாலான விஷயமாக இருக்கிறது.

இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வரதட்சணை கொடுமைக்கு எதிராக பசுமைப்படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த படை அங்குள்ள 14 மாவட்டங்களில் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த படையில் 14 ஆயிரத்து 400 பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். சராசரியாக மாதம் நான்கு, ஐந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார்கள்.

இந்த சேவைப் படையை உருவாக்கிய பெண் 50 வயதாகும் அங்குரி தகாடியா. கனாஜ் பகுதியை சேர்ந்த இவருடைய வீட்டை ஒரு கும்பல் அபகரித்துவிட்டது. அதற்கு நியாயம் கிடைக்கக்கோரி போராட்ட களத்தில் இறங்கியவர் தன்னை போல் பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்று திரட்டி பசுமைப் படையை உருவாக்கி விட்டார். இந்த படையினர் பச்சை நிறத்தில் புடவை உடுத்தி, கையில் கம்புகளுடன் வலம் வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக எந்த ரூபத்தில் பிரச் சினை எழுந்தாலும் துணிச்சலுடன் தட்டிக்கேட்கிறார்கள்.

‘‘எனது சொந்த வீட்டை ஒரு கும்பல் அபகரித்துக்கொண்டது. என் கணவர் இறந்துவிட்டார். அந்த தைரியத்தில் எங்களை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். நானும், என் மூன்று குழந்தைகளும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தோம். சொந்த வீட்டை இழந்து சாலையோரம் வசித்தோம். எங்கள் குடும்பத்தினரின் பெயரில் அந்த சொத்தை பத்திரப்பதிவு செய்து வைக்கவில்லை. அதுதான் நாங்கள் செய்த பெரிய தவறு.

சொந்த வீடு பறிபோனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூலான் தேவியாக மாறினால்தான் நியாயம் கிடைக்கும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் பழிக்குப்பழி நடவடிக்கை எடுத்தால் என் குடும்பம் பாதிப்புக்குள்ளாகும் என்று நினைத்து அந்த முடிவை கைவிட்டேன். அப்போதுதான் பெண்களை ஒன்று சேர்த்து பசுமைப் படையை உருவாக்கினேன்.

நான் வெளியிடங்களுக்கு பயணிக்கும்போது நிறைய பேர் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். தங்கள் கிராமத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். அவர்களுடன் சென்று எங்கள் குழுவின் செயல்பாடுகளை விளக்கி கூறுவேன். அதை கேட்டு ஆர்வமுடைய பெண்கள் எங்கள் குழுவில் இணைந்துகொள்கிறார்கள். தங்கள் பிரச்சினைகளை எங்களுடன் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் நேர்மையுடன் செயல்படுவதால் குழுவில் சேருவதற்கு யாரும் தயங்குவதில்லை. பெண்கள் புகார் கொடுத்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எங்கள் குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை அறிந்த பிறகே இறுதி முடிவுக்கு வருவோம். ஒருமுறை பெண் அதிகாரி ஒருவர் என்னை அவதூறாக பேசினார். நான் தைரியமாக தட்டிக்கேட்டேன். சில பிரச்சினைகளுக்காக சிறைக்கு சென்றிருக்கிறேன். அதற்காக ஒருபோதும் பயப்பட்டதில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போராடுவதை எனது கடமையாக கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், அங்குரி தகாடியா.

இந்த பசுமைப் படைக்கு போலீசார் மத்தியில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் உள்ளது.

‘‘சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கும்போது பிரச்சினை எழுகிறது. கையில் கம்புகளை வைத்திருப்பதை அவர்களுக்கு கிடைத்த அதிகாரமாக கருதுகிறார்கள். ஆனால் அதன் மூலம் அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முடியாது. அதேவேளையில் பல சமயங்களில் அவர்கள் போலீசாருக்கு உதவியாக இருக்கிறார்கள். அவர்களின் தைரியமான செயல்பாடுகளால் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்திருக்கின்றன. சில சமயங்களில் போலீஸ் நிலையத்திற்கு வராமல் இந்த படையின் உதவியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறார்கள்’’ என்கிறார், அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரித் குமார். 

மேலும் செய்திகள்