வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: வேலூர் மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள்
வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேரும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 1,681 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்க்கலாம்.
பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்களை பெறும் வாக்காளர்கள் சமீபத்தில் எடுத்த வண்ண புகைப்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு- வெள்ளை புகைப்படம் ஏற்று கொள்ளப்படாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து கிராமங்களிலும் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாளில் சுருக்க திருத்தம்-2019 வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.
கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் இடம் பிடித்திருந்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 883 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 38 ஆயிரத்து 75 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.