ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தியவர் கைது 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-01 23:34 GMT
சென்னை,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயில்(வ.எண்.13351) சென்னை சென்டிரலுக்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியை விட்டு இறங்கி சென்றனர். அதில் பொதுப்பெட்டியில் பயணம் செய்த தேனி மாவட்டம் தேவாரம், மூனாண்டிபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி(வயது 45) என்பவர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லாமல் பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்தார்.

பின்னர், காலை 10 மணிக்கு பிளாட்பாரத்தில் இருந்து ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதி அருகே வந்து ஆட்டோ மூலம் கோயம்பேடு செல்ல முயன்றார்.

கஞ்சா கடத்தல்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன், சப்- இன்ஸ்பெக்டர் சரளா, உமாபதி மற்றும் போலீசார் சந்தேகத்தின்பேரில் ராமமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவர் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 12 கிலோ எடையுள்ள கஞ்சாவை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் ராமமூர்த்தியை கைது செய்து, அவர் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து ராமமூர்த்தியையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம், ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்