புளியந்தோப்பில் கல்லால் தாக்கி கூலித்தொழிலாளியை கொலை செய்தவர் கைது

புளியந்தோப்பில், தனது தூக்கத்தை கலைத்ததாக கூலித்தொழிலாளியை கல்வீசி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-09-01 23:32 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு ஆசீர்வாதபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 56). இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி சத்துணவு கூடத்தின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் அங்கு சென்று தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த லோகநாதன் மீது யாரோ கல்லை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த லோகநாதன், கீழே எட்டிப்பார்த்தார்.

கூலித்தொழிலாளி

அப்போது அங்கு, ஆசீர்வாதபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சின்னா என்ற சின்னய்யா (39) என்பவர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். அவர்தான் தன் மீது கல் வீசி, தனது தூக்கத்தை கலைத்ததாக நினைத்து ஆத்திரம் அடைந்த லோகநாதன், அருகில் இருந்த செங்கல்லை எடுத்து மொட்டை மாடியில் இருந்தபடி கீழே நின்ற சின்னா மீது வீசினார்.

அவரது தலையில் செங்கல் விழுந்ததால் படுகாயம் அடைந்த சின்னா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உயிரிழந்தார்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேசின்பிரிட்ஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார், படுகாயம் அடைந்த சின்னாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சின்னா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

பலியான சின்னாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மேலும் செய்திகள்