மேம்பாலத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி: மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய போது விபத்தில் சிக்கியது அம்பலம் 2 பேர் கைது
குரோம்பேட்டை விபத்தில், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய போது விபத்தில் சிக்கியது அம்பலமானது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தனது நண்பரான விஜய்பிரகாஷ் (16) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டதில், சுமார் 40 அடிஉயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விஜய்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த 16 வயது சிறுவன் காயம் அடைந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில், 250 கிராம் கஞ்சா இருந்தது.
விசாரணையில், அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திச்சென்றபோது விபத்தில் சிக்கி, விஜய்பிரகாஷ் பலியானது தெரிந்தது. இதுபற்றி குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போலீசார் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த 16 வயது சிறுவன் மற்றும் பலியான விஜய்பிரகாஷின் அண்ணன் சூர்யபிரகாஷ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.