நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தலைவர்கள் ஆலோசனை கொப்பலில் சித்தராமையா போட்டியிட வலியுறுத்தல்

பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். கொப்பலில் சித்தராமையாவை போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.

Update: 2018-09-01 21:45 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். கொப்பலில் சித்தராமையாவை போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வியூகங்கள் குறித்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். முதற்கட்டமாக நேற்று பல்லாரி, கொப்பல், பெலகாவி மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், பிற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி டி.கே.சிவக்குமார், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும்படியும், வாரிய தலைவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சித்தராமையா போட்டியிட...

மேலும் பல்லாரி மாவட்டத்தில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம், அங்கு எதிர்க்கட்சியான பா.ஜனதாவின் பலம், பலவீனம் குறித்து நிர்வாகிகளுடன் தலைவர்கள் கேட்டு அறிந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்லாரியை சேர்ந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த தலைவர் ஸ்ரீராமுலுவுடன் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதுபற்றி காங்கிரஸ் தலைவர்களிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் ஆனந்த்சிங் மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபோல, கொப்பல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது அந்த மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்படி வலியுறுத்தினார்கள். மேலும் கொப்பல் மாவட்டத்தில் போட்டியிடும்படி நிர்வாகிகள் சித்தராமையாவிடம் கூறினார்கள். இதனை ஏற்க சித்தராமையா மறுத்து விட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொப்பலில் காங்கிரஸ் குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என நிர்வாகிகளிடம் சித்தராமையா கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகிகள் யாரும் பதில் சொல்லவில்லை.

மந்திரிசபை விரிவாக்கம்

பெலகாவி மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையின் போது மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கும், லட்சுமி ஹெப்பால்கர் இடையே உள்ள மோதல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்தார். குறிப்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மூத்த எம்.எல்.ஏ.க்களான ராமலிங்கரெட்டிக்கும், வடகர்நாடகத்தை சேர்ந்த எச்.கே.பட்டீலுக்கும் மந்திரி பதவி வழங்கும்படி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய வேணுகோபால், “மூத்த தலைவர்களை காங்கிரஸ் புறக்கணிக்கவில்லை. அவர்களுக்கு தகுந்த நேரத்தில் பதவி வழங்கப்படும். வடகர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு மந்திரிசபையில் முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த மாதம் 3-வது வாரத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவதுடன், வாரிய தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள். மந்திரிசபையில் யாரை சேர்ப்பது என்பது குறித்து ராகுல்காந்தி முடிவு எடுப்பார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி காங்கிரசை வெற்றி பெற செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்,“ என்றார்.

மேலும் செய்திகள்