தேர்தலில் ஓட்டுப்போடாததால் வாக்கு கேட்க உரிமை இல்லை நடிகை ரம்யா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்

தேர்தலில் ஓட்டுப்போடாததால் வாக்கு கேட்க உரிமை இல்லை. எனவே, நடிகை ரம்யா அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற வேண்டும் என்று பா.ஜனதா பிரமுகர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-01 22:00 GMT
பெங்களூரு, 

தேர்தலில் ஓட்டுப்போடாததால் வாக்கு கேட்க உரிமை இல்லை. எனவே, நடிகை ரம்யா அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற வேண்டும் என்று பா.ஜனதா பிரமுகர் வலியுறுத்தியுள்ளார்.

நடிகை ரம்யா

தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. நடிகையான இவர் மண்டியா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆவார். தற்போது ரம்யா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரசார கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பற்றி அவர் பதிவிட்டு வருவதோடு, சமூக வலைத்தளங்களை கையாளுவது குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் வழங்கி வருகிறார்.

தேர்தலில் வாக்களிக்கவில்லை

இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக ரம்யா பிரசாரம் செய்தார். ஆனால், மண்டியா தொகுதி வாக்காளர் பட்டியலில் ரம்யாவின் பெயர் இருந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகை ரம்யா வாக்களிக்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. நகரசபை தேர்தலில் 11-வது வார்டு வாக்காளர் பட்டியலில் ரம்யாவின் பெயர் இருந்தது. இருப்பினும், நேற்று முன்தினம் மண்டியா நகரசபைக்கு நடந்த தேர்தலிலும் நடிகை ரம்யா வாக்களிக்கவில்லை.

இதற்கு பா.ஜனதா மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் ரம்யா போட்டியிடக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில், மண்டியா மாவட்டம் உப்பரகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரான சிவக்குமார் ஆராத்தியா, நடிகை ரம்யாவுக்கு எதிராக பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் சிவக் குமார் ஆராத்தியா கூறியதாவது:-

நிரந்தர ஓய்வு

ரம்யா அவர்களே, நீங்கள் மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறீர் கள். உங்களின் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உள்ளனர். மண்டியா மாவட்டத்திலும் உள்ளனர். வாக்களிப்பது நமது உரிமை என்று கூறி நீங்கள், வாக்களித்தால் உங்களை பார்த்து ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாகமாக வாக்களிக்க முன் வருவார்கள். தேர்தல் அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்களை வைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்கள் விரும்பும் நடிகையாகவும், தேசிய கட்சியின் பிரமுகராகவும் உள்ள உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

நீங்கள் முதலில் தேர்தலில் வாக்களியுங்கள். அதன் பிறகு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள். உங்களை பார்த்து ரசிகர்கள் வாக்களிக்க முன்வருவார்கள். ஆனால் நீங்களே வாக்களிக்காமல் இருக்கிறீர்கள். இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டாம். போட்டியிட்டாலும் உங்களுக்கு வாக்களிக்க கூடாது என்ற பிரசாரத்தை முன்எடுப்போம். நீங்கள் அரசியலில் நிரந்தரமாக ஓய்வு பெற வேண்டும். வாக்களிக்காத உங்களுக்கு வாக்கு கேட்க எந்த உரிமையும் இல்லை ரம்யா அவர்களே.

இவ்வாறு அவர் கோபமாக கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்