முதல்-மந்திரியின் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் குவிந்த மக்கள் வருகிற 10-ந்தேதி முதல் வடகர்நாடகத்தில் சுற்றுப்பயணம் குமாரசாமி அறிவிப்பு

பெங்களூருவில் முதல்-மந்திரியின் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறைகளை கூற நேற்று ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்களிடம் குறைகளை குமாரசாமி கேட்டறிந்தார்.

Update: 2018-09-01 23:00 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் முதல்-மந்திரியின் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறைகளை கூற நேற்று ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்களிடம் குறைகளை குமாரசாமி கேட்டறிந்தார். முன்னதாக அவர் வருகிற 10-ந்தேதி முதல் வடகர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவித்தார்.

ஜனதா தரிசனம் நிகழ்ச்சி

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், முதல்-மந்திரி குமாரசாமி வாரந்தோறும் சனிக்கிழமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் ஜனதா தரிசனம் எனப்படும் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, கிருஷ்ணா இல்லத்தில் நேற்று முதல் முறையாக ஜனதா தரிசனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குறைகளை முதல்-மந்திரியிடம் கூறுவதற்கு கிருஷ்ணா இல்லத்திற்கு திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் குறைகளை சொல்ல வந்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையாக முதல்-மந்திரியை சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டார்கள்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

முன்னதாக நேற்று காலை 11 மணியளவில் ஜனதா தரிசனம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2 மணிநேரம் தாமதமாக மதியம் 1 மணியளவில் தான் ஜனதா தரிசனம் தொடங்கியது. முதலாவதாக மாற்றுத்திறனாளிகளிடம் முதல்-மந்திரி குமாரசாமி குறைகளை கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் டோக்கன் பெற்றவர்கள் முதல்-மந்திரியை சந்தித்து தங்களது குறைகளை கூறினார்கள். அப்போது பலர் தங்களுக்கு இருக்கும் கடன் மற்றும் ஏழ்மை நிலை குறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் கூறி கதறி அழுதார்கள்.

அவ்வாறு தங்களது பிரச்சினைகள், குறைகளை கூறியவர்களிடம் கனிவாக கேட்டு அறிந்து கொண்ட முதல்-மந்திரி குமாரசாமி, அந்த பிரச்சினைகளை சரி செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். முன்னதாக முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமத்தில் தங்குவது குறித்து...

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஜனதா தரிசனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து, அவர்களது பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தேன். தற்போது 12 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு ஒவ்வொரு நாட்களும் மக்கள் என்னை சந்தித்து தங்களது குறைகளை கூறியுள்ளனர். அவர்களது பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மாநில வளர்ச்சிக்காக ஏராளமான கனவுகளை கண்டுள்ளேன். கிராமத்தில் தங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் எனது உடல்நிலை குறித்து டாக்டர்களுடன் பேசுவேன். அவர்களது ஆலோசனையின் பேரில் கிராமத்தில் தங்கி விவசாயிகள் உள்ளிட்டோரின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொள்ளவும், அதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். அதிகாரிகளை கிராமத்தில் தங்கும்படி நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாதத்தில் ஒருமுறை தாலுகா பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன்.

வடகர்நாடகத்தில் சுற்றுப்பயணம்

வாரத்தில் நான்கு நாட்கள் ஒவ்வொரு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மாதத்தில் ஒரு முறை ஏதாவது மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்கவும், மற்ற மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் முடிவு செய்துள்ளேன். இந்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை வடகர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். குடகு உள்ளிட்ட மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.138 கோடி வந்துள்ளது.

பெங்களூருவில் தெரு நாய்கள் கடித்து 10 வயது சிறுவன் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். நாய்கள் உள்ளிட்ட பிற விலங்குகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகளும், சட்டமும் இருக்கிறது. அதே நேரத்தில் தெருநாய்கள் கடித்து சிறுவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்படுகிறது. அதனால் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நாய்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முதல்-மந்திரி குமாரசாமி வடகர்நாடகத்தை புறக்கணித்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் வடகர்நாடகத்தில் 10-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக குமாரசாமி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்