பட்டா மாறுதல் உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததால் தாலுகா அலுவலகத்துக்கு தீ வைத்த தொழிலாளி கைது

பட்டா மாறுதல் உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததால், அறந்தாங்கி தாலுகா அலுவலகத்துக்கு தீ வைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Update: 2018-09-01 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் அன்புராஜ் (45). இவர் சென்னையில் உள்ள இந்திய எண்ணெய் கழக நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நடேசன் கடந்த 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். அப்போதே அவரின் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக் கோரி, அன்புராஜ் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அப்போது தாலுகா அலுவலகத்தில், நடேசன் பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும் திருநாளூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது பெயரில் மாற்றப்பட்டதாக கூறி உள்ளனர். இதனையடுத்து அன்புராஜ், தந்தை பெயரில் உள்ள சொத்துக்களில் தனக்கு உள்ள உரிமையை எடுத்துக்கூறி, பெயர் மாற்றம் செய்து தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இதற்காக அடிக்கடி சென்னையில் இருந்து அறந்தாங்கிக்கு வந்து தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் என அலைந்துள்ளார். ஆனால் 7 ஆண்டுகளாக அவருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து, அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அன்புராஜ், நேற்று முன்தினம் காலை சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் பட்டறைகளில் தீ பற்றுவதற்கு பயன்படுத்தும் கருவி ஆகியவற்றுடன் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்த அவர், தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தராவிட்டால் இந்த சிலிண்டரை வெடிக்க செய்து விடுவேன் எனக்கூறி தீயை பற்ற வைத்துள்ளார்.

இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உயிர் பிழைத்தால் போதும் என அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினார்கள். அன்புராஜ் பற்ற வைத்த தீ பிடித்ததில் அங்குள்ள மேஜைகளில் இருந்த தாள்கள், ஜன்னலில் தொங்க விட்டிருந்த துணி, ஒரு பிளாஸ்டிக் நாற்காலி ஆகியவை எரிந்தன. மேலும் அலுவலகம் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

அப்போது ஒரு ஊழியர் மட்டும் துணிச்சலுடன் அன்புராஜை மடக்கி வெளியேற்றினார். சிலிண்டர் தீயையும் அணைத்து வெளியே கொண்டு வந்து போட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும், அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் விரைந்து வந்து, அன்புராஜை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

அவர் மீது அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தது, தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்று தீ வைத்து எரித்தது ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்