கடலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கடலூர் மாவட்டத்தில் 19 லட்சத்து 98 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.;
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வெ.அன்புசெல்வன் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வரைவு வாக்காளர் பட்டியல் அடங்கிய சி.டி.க்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 20 லட்சத்து 18 ஆயிரத்து 16 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் தொடர் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 6,737 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இறந்த வாக்காளர்கள், இடம் பெயர்ந்து சென்ற வாக்காளர்கள், இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் என 26 ஆயிரத்து 67 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதனால் இப்போது வெளியிடப்பட்டு உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 19 லட்சத்து 98 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 71 பேரும், பெண்கள் 10 லட்சத்து 5 ஆயிரத்து 515 பேரும், இதர வாக்காளர்கள் 100 பேரும் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வாக்குச்சாவடி மையங்களிலும், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படும். எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் அதற்குரிய படிவம் 6–ஐ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வருகிற 1.1.2019–ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் (31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள்) படிவம் 6–ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி வருகிற 31–10–2008–ந்தேதி ஆகும்.
இது தொடர்பாக சிறப்பு கிராமசபை கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது. இந்த பணிக்கு அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.