பெரம்பலூர்-அரியலூரில் அஞ்சல் துறையின் புதிய வங்கி சேவை தொடக்கம்

பெரம்பலூர்-அரியலூரில் அஞ்சல் துறையின் புதிய வங்கி சேவை தொடங்கப்பட்டது.

Update: 2018-09-01 22:45 GMT
பெரம்பலூர்,

பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் முதற்கட்டமாக 650 வங்கி கிளைகளும், 3 ஆயிரத்து 250 அஞ்சலகத்துடன் இணைந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்கிற புதிய வங்கி கிளைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், மதனகோபாலபுரம், வாலிகண்டபுரம், ரஞ்சன்குடி, தேவையூர் ஆகிய 5 இடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்கிற அஞ்சல் துறையின் புதிய வங்கி கிளைகள் தொடங்கப்பட்டன. இதற்கான விழா பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில், மருதராஜா எம்.பி. பெரம்பலூர், மதனகோபாலபுரம் உள்ளிட்ட 5 இடங்களுக்கான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்கிற அஞ்சல் துறையின் புதிய வங்கி சேவையினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், அந்த வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியவர்களுக்கு கியூ.ஆர்.கார்டுகளை வழங்கினார்.

விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியன், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மைக்கேல்ராஜ், பெரம்பலூர் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மேலாளர் ஆனந்த், கூடுதல் மேலாளர் நிவேதா, தலைமை தபால் நிலைய அலுவலர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்கிற புதிய வங்கி சேவை தொடங்கப்பட்டது. இதற்கான விழா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அஞ்சல் துறையின் புதிய வங்கி சேவையினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட, கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி முதுநிலைமேலாளர் சலீம்ராஜா, உதவிஅஞ்சலக கண்காணிப்பாளர் ஆறுமுகம், மீனாட்சி ராமசாமி கல்விகுழுமத்தின் செயலாளரும், தாளாளருமான ரகுநாதன், இயக்குனர் ராஜமாணிக்கம் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்