விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 26 லட்சத்து 13 ஆயிரத்து 918 வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2018-09-01 22:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2019 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணி 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த பணியை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–

10.1.18 அன்றைய தேதியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 33 ஆயிரத்து 647 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து 33 ஆயிரத்து 602 பெண் வாக்காளர்களும், 379 திருநங்கைகளும் ஆக மொத்தம் 26 லட்சத்து 67 ஆயிரத்து 628 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் என 30 ஆயிரத்து 11 ஆண்களும், 42 ஆயிரத்து 446 பெண்களும், 16 திருநங்கைகளும் என 72 ஆயிரத்து 473 பேர் நீக்கப்பட்டனர்.

மேலும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி 8 ஆயிரத்து 366 ஆண் வாக்காளர்களும், 10 ஆயிரத்து 392 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 763 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதன் அடிப்படையில் தற்போது 13 லட்சத்து 12 ஆயிரத்து 2 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து ஆயிரத்து 548 பெண் வாக்காளர்களும், 368 திருநங்கைகளும் ஆக மொத்தம் 26 லட்சத்து 13 ஆயிரத்து 918 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், சப்–கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நியமன வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம். இதுதவிர வாக்காளர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம். புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட உள்ளவர்களுக்கு வருகிற 25.1.19 அன்று தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளின் கீழ் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 31.10.18 வரையிலான காலங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நியமன வாக்குச்சாவடி அமைவிடங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வருகிற 8, 22–ந் தேதிகளிலும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 13–ந் தேதிகளிலும் மாவட்டத்தில் உள்ள 1,099 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டமும், வருகிற 9, 23–ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 7, 14–ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குச்சாவடி அமைந்துள்ள கட்டிட பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தகுதியான வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காமல் இருப்பவர்களை பெயர் சேர்க்க அரசியல் கட்சியினர் அறிவுறுத்த வேண்டும். 1.1.19 அன்று 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களையும் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்