நீலகிரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கிக்கிளை தொடக்கம்
நீலகிரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கிக்கிளை தொடங்கப்பட்டு உள்ளது. அரசு மானியங்களை பெற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.;
ஊட்டி,
இந்தியா அஞ்சல் துறையில் அனைத்து தபால் நிலையங்களும் கணினி மயமாக்கப்பட்டு, பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்திய அஞ்சல் துறை வங்கி களின் சேவைகளை அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிராம மக்களுக்கும் எளிதாக வழங்குவதற்காக அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற தபால் நிலையங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் துணை தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். வங்கிக்கிளையை கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி கணக்கை கணினி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் பயன்கள் குறித்த நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் வங்கி கணக்கு தொடங்கிய 200 பேரில் சிலருக்கு கியூர்ஆர் அட்டைகள் வழங்கப்பட்டது.
பின்னர் நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் பேசியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஊட்டி சேரிங்கிராஸ் துணை தபால் நிலையம், மசினகுடி துணை தபால் நிலையம், மாவனல்லா, மாயாறு, சிங்காரா ஆகிய 5 தபால் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவை மட்டும் போதுமானது. புகைப்படமோ அல்லது இருப்பிட சான்றிதழோ தேவையில்லை. பணம் செலுத்தாமலேயே வங்கி கணக்கை தொடங்கலாம். இதன் மூலம் ஓய்வூதிய பலன்கள், கியாஸ் மானியம், அரசு வழங்கும் மானியங்களை பெறலாம். மொபைல் வங்கி செயலி, குறுஞ்செய்தி போன்ற வசதிகளும் உள்ளன.
தபால்காரர்கள் உங்களது வீட்டுக்கு வரும் போது, கியூஆர் அட்டை சொருகி தங்களது கைரேகை வைத்து தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல தபால்காரர் மூலம் வங்கி கணக்கில் பணமும் செலுத்தலாம். இந்த பணபரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். எதிர்காலத்தில் விவசாயத்துக்கான மானியம், மத்திய அரசின் மானியம், கடன் தள்ளுபடி போன்ற பயன்களை வங்கிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து கிராமங்களிலும் துணை அஞ்சலகங்கள், கிளை தபால் நிலையங்கள் உள்ளதால் சாதாரண மக்கள் வங்கியை நாடி செல்ல வேண்டியது இல்லை. இருப்பு வைக்கும் பணத்துக்கு தினமும் 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும்.
நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் தங்களது பணத்தை எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். குடிநீர், மின்சாரம், டி.டி.எச். கட்டணம், கல்லூரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம். இந்த திட்டம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.