திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: சுவாமி-அம்பாள் வீதிஉலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Update: 2018-09-01 21:00 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பின்னர் மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வெள்ளி யானை-சரப வாகனம்

4-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்