வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடி மாவட்டத்தில் 13 லட்சத்து 90 ஆயிரத்து 792 வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 லட்சத்து 90 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளதாக, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2018-09-01 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 லட்சத்து 90 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளதாக, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

13¾ லட்சம் வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 13 லட்சத்து 97 ஆயிரத்து 277 வாக்காளர்கள் இருந்தனர். இதில் பல்வேறு தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 915 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 414 வாக்காளர்களும், திருச்செந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 219 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 885 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 411 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 948 வாக்காளர்களும் உள்ளனர்.

மாவட்டத்தில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 905 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 5 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 89 திருநங்கைகளும் ஆக மொத்தம் 13 லட்சத்து 90 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று வாக்குச்சாவடிகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன. புதிதாக 31 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மொத்தம் 1,593 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சிறப்பு முகாம்

1-1-19 அன்று 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்வதற்காக அந்தந்த வாக்குச்சாவடிகளில் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் விண்ணப்பங்களை கொடுக்கலாம். மேலும் மனுதாக்கல் செய்யலாம். மேலும் 9-9-18, 23-9-18, 7-10-18, 14-10-18 ஆகிய 4 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யவேண்டும். முகவர்கள் மொத்தமாக 10 படிவங்களுக்கு மேல் சமர்ப்பிக்கக்கூடாது. சிறப்பு சுருக்க முறை திருத்த நாட்களில் அதிகபட்சமாக மொத்தம் 30 மனுக்களை அளிக்கலாம். எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்திய தேர்தல் ஆணையம் அளித்த அறிவுரையின்படி பணிகளை மேற்கொள்ள நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் என்.சின்னத்துரை, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட செயலாளர் சிவராமன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), தேர்தல் பிரிவு தாசில்தார் நாகராஜன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்