பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு உறுதுணையாக ம.தி.மு.க. இருக்கும் திருச்சியில் வைகோ பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு உறுதுணையாக ம.தி.மு.க. இருக்கும் என வைகோ தெரிவித்தார்.;
திருச்சி,
பேரிடர் காலங்களில் ம.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு உதவிட ஆபத்து உதவி அணி என ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 400 இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அணிக்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று, பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தற்போது தமிழகத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், தலைசிறந்த எழுத்தாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என உளவுத்துறை கூறி இருக்கிறது. இந்தியாவில் 34 பேரை கொலை செய்வதென்று திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 8 பேரும், தமிழகத்தில் ரவிக்குமார் பெயரும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பிரகடனம் செய்யப்படாத அவசர நிலை இந்தியாவில் நிலவுகிறது. நெருக்கடி காலத்தில் கூட சிறையில் தான் அடைத்தனர். ஆனால் தற்போது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிற ஆபத்தான போக்கை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது மதசார்பின்மைக்கான சவால் எனக் கருதுகிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் மதவாத அரசியலுக்கு எதிராக செயல்பட தி.மு.க. உறுதி பூண்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்துக்காகவே வாழ்ந்து வருபவன் நான். தற்போது திராவிட இயக்கத்துக்கு எதிராக கேடு செய்கிற வேலையில் பல சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. எனவே, நாங்கள் ஆழ்ந்து சிந்தித்து, திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு, தி.மு.க.வுக்கு என்றும் அரணாக, பக்கபலமாக, உறுதுணையாக இருப்பது என்று ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் சரியான அணுகுமுறையை தி.மு.க. எடுக்கும். தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு(மாநகரம்), சேரன்(புறநகர்), மாநில மகளிர் அணி செயலாளர் ரொகையா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.