ஈரோடு கோட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை

ஈரோடு கோட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

Update: 2018-09-01 22:30 GMT

ஈரோடு,

இந்திய தபால் துறை மூலம் ‘‘இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி’’ என்ற பெயரில் தபால் துறையின் வங்கி சேவையை பிரதமர் நரேந்திரமோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி ஈரோடு தபால் கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு தலைமை தபால் நிலையம், ஈரோடு கிழக்கு துணை தபால் நிலையம், நாமக்கல் மாவட்டம் காவிரி ரெயில் நிலைய துணை தபால் நிலையம், கொக்கராயன்பேட்டை கிளை தபால் நிலையம், பாப்பம்பாளையம் கிளை தபால் நிலையம் ஆகிய 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு ஈரோடு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் தலைமை தாங்கினார். ஈரோடு தலைமை தபால் நிலைய அதிகாரி எஸ்.சென்னகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு தபால் துறையின் வங்கி சேவையை தொடங்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கி பேசினார்கள். திட்டம் குறித்து முதுநிலை கண்காணிப்பாளர் சுரேக்ரகுநாதன் பேசும்போது கூறியதாவது:–

தபால் துறையின் வங்கி சேவையில் தொடங்கப்பட்ட கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவையில்லை. கணக்கை தொடக்க புகைப்படம், கையெழுத்து, அடையாள அட்டை நகல் போன்ற படிவங்கள் தேவையில்லை. ஆதார் எண், பான் கார்டு எண், செல்போன் எண் ஆகியன போதுமானது. இருப்பு தொகைக்கு ஏற்ப தினசரி வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும். தேவைப்பட்டால் தபால்காரர் மூலமாக வீட்டிற்கே வந்து சேவை அளிக்கும் வசதி செய்து தரப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளுக்கும் எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த முடியும். மேலும், மின்சாரம், தொலைபேசி, செல்போன், காப்பீடு, கடன் தவணை போன்ற அனைத்து கட்டணங்களை செலுத்தலாம். இதேபோல் சிறு, குறு தொழில் உள்பட எந்தவொரு தொழிலுக்கும் நடப்பு கணக்கு தொடங்கி கொள்ளலாம். மிக குறைந்த இருப்பு தொகையான ரூ.1,000 செலுத்தி நடப்பு கணக்கை தொடங்கலாம். காசோலை வசதியும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்