பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்த போது 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் சாவு
ஊட்டி அருகே மகளை பார்க்க வந்த போது 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ஊட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). தொழில் அதிபர். இவருடைய மனைவி வரலட்சுமி (35). இவர்களது மூத்த மகள் வைஷ்ணவி (19), ஆந்திர மாநிலம் அவுரங்கபாத்தை சேர்ந்த உறவினர் சத்யா (38) ஆகிய 4 பேரும் ஒரு காரில் நேற்று ஊட்டி நோக்கி வந்தனர். காரை ராஜசேகர் ஓட்டினார்.
ராஜசேகரின் மகள் காவ்யா, சத்யாவின் மகள் ரீயா ஆகியோர் ஊட்டி அருகே லவ்டேலில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான லாரன்ஸ் பள்ளியில் தங்கி 9–ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர் களை பார்ப்பதற்காக காரில் 4 பேரும் சேலாஸ்–காட்டேரி சாலையில் காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் சாலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் தேயிலை தோட்டத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சத்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜசேகர், வரலட்சுமி, வைஷ்ணவி ஆகிய 3 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.
இதை பார்த்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வனத்துறையினர், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று அந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கொலக்கொம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மகளை பார்க்க ஆசை ஆசையாக வந்த சத்யா விபத்தில் இறந்ததை அறிந்த அவருடைய மகள் ரீயா கதறி அழுதார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.