ராமநாதபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் கிராமத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-09-01 22:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காரிக்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பதூர் ஜமான் மனைவி மைமூனா ராணி. இவர் கணவர் இறந்து விட்டதை தொடர்ந்து தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினார்.

மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சாகுல்ஹமீது மகன் அஜ்மல்கான் என்பவரது வீட்டிலும் அதே நாளில் மர்ம ஆசாமிகள் பின்புற ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த கேமராவை திருடிச்சென்று விட்டனாராம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் போலீசார் இரவு ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் வெகுவாக குறைந்தது. இதனிடையே தற்போது மீண்டும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்