தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தொழிலாளி வி‌ஷம் குடித்ததாக தற்கொலை நாடகமாடியது அம்பலம்

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தொழிலாளி வி‌ஷம் குடித்ததாக தற்கொலை நாடகமாடியது அம்பலமானது.

Update: 2018-09-02 00:00 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் சுவர்கள் மற்றும் மரங்களில் தன்னுடைய படத்தை அச்சிட்டு தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார். இதை பார்த்த உறவினர்கள் விசாரித்தபோது அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் அன்பரசு தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் வி‌ஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென அவர் ஆஸ்பத்திரியில் இருந்து யாரிடம் கூறாமல் வெளியேறினார். இதை அறிந்த உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கேட்டபோது, தெரியாமல் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று கூறினார். இதன் மூலம் வி‌ஷம் குடித்ததாக தற்கொலை நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

மேலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடிக்க கொடுத்த அச்சகத்தில் உள்ளவர்கள், ‘கண்ணீர் அஞ்சலி என்று குறிப்பிட்டு உங்களுடைய படத்தை ஏன் போட கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது என்னுடைய படம் இல்லை. என்னுடைய அண்ணனுடைய படம்’ என்றும் கூறியுள்ளதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்