தினம் ஒரு தகவல் : ஈயத்தால் உடலுக்கு வரும் ஆபத்து

நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

Update: 2018-09-01 03:27 GMT
இன்று உலகில் 12 கோடி மக்கள் இந்த ஆபத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.

பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலில் சேரும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் சேரும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. குழந்தைகளுக்குள் வேதி மாசுகள் அதிகமாக சேரும் வாய்ப்பு உள்ளன. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது.

பொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருட்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர்) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவி நரம்புமண்டலத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும், பணியிடங்களிலும் சுவர்கள், பர்னிச்சர் பொருட்களில் பூசப்பட்ட பெயிண்ட்களில் இருந்து பெரியவர்களையும், குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது.

சுவர்களில் உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கும். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது. இது போன்ற காரணங்களாலும் உடலுக்கு ஈயத்தால் பாதிப்பு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

மேலும் செய்திகள்