தேநீர் விற்பனை செய்து கேரள மக்களுக்காக நிதி திரட்டிய மாணவர்கள் முதல்-மந்திரியிடம் ஒப்படைத்தனர்

தேநீர் விற்பனை செய்து கேரள மக்களுக்காக லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நிதி திரட்டினர். அந்த நிதியை முதல்-மந்திரி யிடம் ஒப்படைத்தனர்.;

Update:2018-09-01 05:25 IST
மும்ைப, 

தேநீர் விற்பனை செய்து கேரள மக்களுக்காக லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நிதி திரட்டினர். அந்த நிதியை முதல்-மந்திரி யிடம் ஒப்படைத்தனர்.

முதல்-மந்திரி வேண்டுகோள்

கேரள மாநிலம் தொடர் மழை காரணமாகவும், வெள்ளத்தாலும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து முகாம்களின் தஞ்சம் புகுந்தனர். தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கவலையில் உள்ளனர்.

இதையடுத்து பல்வேறு தரப்பினரும் கேரள மக்களுக்கு தங்கள் உதவிகளை செய்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் மராட்டியம் சார்பில் அம்மாநிலத்திற்கு ரூ. 20 கோடி நிதி உதவி வழக்கப்பட்டது.

காசோலையை வழங்கினர்

இந்த நிலையில் கேரள மக்களுக்கு உதவ முடிவு செய்த லாத்தூர் மாவட்டம் அம்பத்பூர் பகுதியை சேர்ந்த ஹரிவன்சாரி பச்சன் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அதற்காக நிதி திரட்ட தேநீர் விடுதி ஒன்றை தொடங்கினர்.

இந்த தேநீர் விடுதி மூலம் கிடைக்கும் தொகையை கேரள மக்களுக்கு வழங்க முடிவு செய்தனர். தேநீர் விற்பனை மூலம் அவர்களுக்கு ரூ. 51 ஆயிரம் கிடைத்தது. இந்த தொகைக்கான காசோலையுடன் நேற்று மும்பை வந்த பள்ளி மாணவர்கள், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்து காசோலையை அவரிடம் ஒப்படைத்தனர். கேரள மக்களுக்கு உதவுவதற்காக மாணவர்கள் தேநீர் விற்று நிதி சேகரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்