காட்பாடியில் ‘பீப்’ பக்கோடா கொடுக்க தாமதமானதால் குழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வாலிபர் கைது
காட்பாடியில் ‘பீப்’ பக்கோடா கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த வாலிபர் தாயுடன் இருந்த 2 வயது குழந்தைமீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரம் நடந்துள்ளது.
காட்பாடி,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காட்பாடியை சேர்ந்த மதினா என்பவர் சி.கே.புரம்- விருதம்பட்டு ரோட்டில் ‘பீப்’ கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் நேற்றுமுன் தினம் மாலை விருதம்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆரிப் என்பவருடைய மனைவி மஸ்தானி (வயது 29) என்பவர் ஆசியா என்ற தனது 2 வயது குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது விருதம்பட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவர் அங்கு வந்தார். அவர் 50 ரூபாய் கொடுத்து ‘பீப்’ பக்கோடா கேட்டுள்ளார். அதற்கு மதினா, ஏற்கனவே சிலர் காத்திருப்பதாகவும், அதனால் சிறிது நேரமாகும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் “நான் இந்த ஏரியா ரவுடி, எனக்கே பக்கோடா தரமாட்டியா?” என்று கூறியபடி அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை தூக்கி மதினா மீது ஊற்ற முயன்றார். இதைப்பார்த்த மதினா விலகிவிட்டார். ஆனால் கொதிக்கும் எண்ணெய் மஸ்தானி கையில் வைத்திருந்த குழந்தையின் கால்கள் மீது பட்டது. இதனால் குழந்தை கதறியது. உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து விருதம்பட்டு போலீசில் மஸ்தானி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.